Thursday, May 16, 2019

சர்வதேச அருங்காட்சியகதினத்தை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் சிறப்பு கண்காட்சிகள்

சர்வதேச அருங்காட்சியகதினத்தை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் சிறப்பு கண்காட்சிகள்
ஒவ்வொரு ஆண்டிலும் மே 18ம் தேதி சர்வதேச அருங்காட்சியக தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒரு சமூகத்தின், ஒரு தேசத்தின் மரபுரிமைகளைப் பேணி பாதுகாப்பதில் அருங்காட்சியகத்தின் பணி மிக முக்கியமானது.அதன் பரிமாணத்தை அளவிட முடியாது. கால காலங்களாக வரலாற்று மாற்றங்களின் சாட்சியங்களாக விளங்கும் அருங்காட்சியகங்கள் நாளைய சந்ததியின் விலை மதிக்க முடியாத சொத்துக்கள். அருங்காட்சியகங்களின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதற்கும் அதே போல இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், சர்வதேச அருங்காட்சியக தினம் 1977ஆம் ஆண்டு முதல் உலகம் பூராகவும் கொண்டாடப்படுகின்றது.
உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகம், லண்டன் பிரிட்டிஷ் அருங்காட்சியகம். அதுபோல இந்தியாவில் மிகப்பெரிய அருங்காட்சியகம் கொல்கத்தாவில் உள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியகம், இரண்டாவது மிகப்பழமையான  அருங்காட்சியகமாக விளங்குகிறது. தமிழகத்தில் மொத்தம் 21 மாவட்ட அருங்காட்சியகங்கள் உள்ளன. நெல்லை அரசு அருங்காட்சியகம் 1992 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக அருங்காட்சியகத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு பொதுமக்கள் அனைத்து தரப்பினரையும் அருங்காட்சியகம் பக்கம் தங்களின் பார்வையினை திருப்ப வைத்து ஒரு சிறந்த கலாச்சார மையமாக செயல் பெற்று வருகின்றது.
சர்வதேச அருங்காட்சியகதினத்தை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் 18/05/2019 அன்று காலை 11 மணிக்கு  மகாத்மா காந்தி – ஒரு சகாப்தம் என்கிற தலைப்பில் காந்தியடிகள் அவர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட அரிய புகைப்படங்கள், தபால் தலைகள், மகாத்மா காந்தி உருவம் பொதித்த நாணயங்களின் புகைப்படங்கள் ஆகியவற்றின் கண்காட்சியும் 25 ஆண்டுகளுக்கு முந்திய நூற்றுக்கும் மேற்பட்ட அரிய தபால்தலைகள் மற்றும் முதல் நாள் தபால் உறைகளின் கண்காட்சியும், மாணவர்களின் ஓவியக்கண்காட்சியும் தடைபெற உள்ளது. அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறலாம் என அருங்காட்சியக காப்பாட்சியர்  சிவ.சத்தியவள்ளி அவர்கள் தெரிவித்தார்.

No comments:

Post a Comment